தொலைக்காட்சி விவாதம் – கூச்சல் கூடாரம்

சமீபத்தில்  பார்த்த ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி – வழக்கமாக பங்குபெறும் நால்வரும் கூச்சல்வாதிகள் என்று அல்லாமல் எனக்கு பிடித்த இரண்டு நிதி ஆலோசகர்கள் பங்கேற்றமையால்; 10 நிமிடங்களுக்கு மேல் பார்த்தேன். வானதி பாஜக, ஜோதிமணி காங்கிரஸ் ஆகிய இருவரும் அந்த பட்ஜெட் கலந்துரையாடலில் பங்கேற்ற மற்றவர்.

Budget
நெறியாளர் கேள்விகளுக்கு நேர்த்தியாக பதில்கள் தமது பாணியில் கொடுத்துக்கொண்டு இருந்தனர் நிதி ஆலோசகர்கள். அரங்கு நேர்த்தியான விவாத்தில் சென்று கொண்டிருந்த நேரம், வானதிக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.  நிதி மேலாண்மை, பொருளாதாரம் போன்ற அன்றைய விவாத பொருட்கள் அனைத்தையும் மறந்து; மக்களின் உணர்ச்சி வசப்பட்ட மனநிலையை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் பேச ஆரம்பித்தார். சற்று நேரத்திற்கெல்லாம் அரங்கு போர்களமாய் காட்சி அளித்தது. வானதியும் ஜோதிமணியும் குடுமி பிடி சண்டை போடாத குறைதான்.
எம் இருவர் மலைத்து அந்த ‘விவாதத்தை’ மௌனித்து பார்த்தனர்.தங்கள் வாய்ப்பையும் வேற்றுக் கூச்சலுக்கு இரு பெண்களும் பறித்துக் கொண்டதால், வாய்ப்பு திணிக்கப்பட்டாலும் அமைதியாகவே இருந்தனர்.அவர்களுக்கு இது புதிதல்ல எனினும், பெண்களின் அர்த்தமற்ற பேச்சில் அவர்கள் மலைத்தது அப்பட்டமாய் தெரிந்தது.அவர்கள் பல தருணங்களில் குறுக்கிட்டு தவறான தகவல்களை சரி செய்திருக்கலாம் தான். ஆனால் பேசினால் எங்கே தம் மரியாதையையும் காற்றில் போகுமென பாஜக-காங்கிரஸ் சண்டை தொடர, தம்மை நொந்து கொண்டனர்.
போர்களமாய் மாற முக்கிய காரணம் ஜோதிமணி. வானதி நியாப்படுத்த முற்படும் அனைத்து பட்ஜெட் கூறுகளையும் கடந்த காலம்,நிகழ் காலம், எதிர் காலக் காரணிகள் கொண்டு வன்மையாய் எதிர்த்தார்.பாஜகவை எதிர்த்தாரே அன்றி அந்த கூறுகளை பொருளாதார ரீதியில் உள்வாங்கி பேசி இருப்பார் என்பது கேள்விக்குரியதே.ஒரே நோக்கம் பாஜகவின்  பட்ஜெட்டை கிழித்து தொங்க விட வேண்டும்.பகுத்தாறைந்தால் மக்கள் கவனியர். கூச்சலிட்டால் வெளிச்சத்துக்கு வருவோம், நாம் யாரென கேட்பர் நால்வர், அவ்வளவே. ஜோதிமணிக்கு பொருளாதாரம் தெரியுமோ இல்லையோ, இன்றைய அரசியல் தெரிந்தே இருக்கிறது.
ஜோதிமணிக்கு கொடுத்த விவரணைகள் வானதிக்கும் பொருந்தும்.ஆளும் கட்சி, மேட்டுக்குடி மனப்பான்மை மற்றும் பாஜக கொலையே செய்தாலும் நியாப்படுத்தும் மனப்பான்மை; இவை மட்டுமே  வேற்றுமை, இருவருக்கும்..’நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், நாங்கள் விஷம் கொடுத்தாலும், அமிழ்தமாய் ருசிக்க வேண்டும்’ என்று வேறு வேறு வார்த்தைகளில் அரசாங்க உழியர் தோரணையில் பேசிகொண்டிருந்தார். சில இடங்களில் அவர் சொன்ன கருத்துக்களில் நிதி ஆலோசகர்களுக்கே மூக்கு வேர்த்திருக்கும். தண்ணீர் குழாய் என்  வீ ட்டு வாசலில் போடப்பட்டிருக்கிறது, நான் தான் தண்ணீர் விநியோகம் செய்வேன்.இஷ்டம் இருந்தால் வரிசையில் நில், இல்லை தாகித்து சாகு என்ற நெடி.
முரணியகத்தில் தான் சமுகம் முன்னேறும் என்பதெலாம் சரி. ஆனால் தொலைக்காட்சி விவாதங்கள் முற்றையும் அழிக்கும் இயக்கமாய் மாறியுள்ளதோ என தோன்றுகிறது. இரு வேறு கருத்துக்களும் நேர்த்தியாய் தொடுத்தால் ஒரு புரிந்துணர்வு வர வாய்ப்புள்ளது. ஆனால் இங்கே வெற்று கூச்சல்களும், வெறுப்பு அரசியலுமே மிஞ்சி நிற்கிறது.பேசு பொருள் மறந்து, வசை பாடும் அரசியல் விவதங்களே இன்று தொலைக்காட்சிகளை நிறைத்துக்கொண்டிருகின்றன. பல சமயங்களில் பேசு பொருள் பார்வையாளருக்கே மறந்துவிடும். விவாதத்தில் விருந்தினர் பார்வை என்பதை தாண்டி கருத்தியல் பார்வை, அரசியல் பார்வை, கட்சியின் பார்வை என திசையின்றி சுற்றுகிறது இன்றைய விவாதங்கள்.
தொலைகாட்சிகளும் இதையே எதிர்பார்கின்றன. விதிவிலக்குள் இல்லை. இந்த விவாதம் ‘புதிய தலைமுறை’ இல் ஒளிபரப்பாகியது. கண்ணியமான விவாதங்களுக்கு ‘பேர் போன’ நிறுவனம்.கண்ணியத்திற்கு விருதுகள் பெற்ற நெறியாளர் குணசேகரனே தொகுத்து வழங்கினார். எனினும், அர்னாப் கோஸ்வமிகளால் உந்தப்பெற்ற ஊடகமாதளால் குழப்பமின்றி செயல்பட வாய்ப்பில்லை என்பதனை நிமிடமொருமுறை நிறுபித்தது.ஊடகத்திருக்கு குழப்பம் தேவை.100 சேனல்கள் இருக்கும் தொலைகாட்சியில், தன் நிகழ்ச்சியைப் பார்கவைக்க ‘கழ(ல)க’ கண்மணிகள் தேவை.பர்வையாலனின் பொழுது போக்கும், யோக்கியமான திண்ணை பேச்சு மனோபாவத்தைப் பசியாற்ற கூச்சல்கள் தேவை.
தமிழ்ச் சுழலில் விவாதம் தொடர்ந்து இருந்து கொண்டே வந்திருகிறது. தமிழர் கருத்தியல்களை முன்னெடுக்க எதிர் தரப்போடு தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். ஆனால் விவாதிப்பவரை எதிரியாய்ச் சித்தரித்து, குழப்பமான நிச்சயமற்ற சுழலை தக்க வைக்க இந்த தொலைக்காட்சி விவாதங்கள் முற்படுகின்றன. இது அரசியல் கட்சிகளின் அணுகுமுறை.பெரும்பாலும் கட்சிகளால் தொடங்கபட்டமையால்/ஆதரவுபெற்றமையால், இந்த ஊடகங்கள் ஒரு நிலையான்மையை நிறுவ தொடர்ந்து முனைகின்றன.புதிய தலைமுறை போன்ற நடுநிலை ஊடகங்களும், இந்த அச்சில் சுற்றும் சக்கர கட்டையாக வாய்க்க நேர்கிறது.இவர்களுக்கு சமநோக்கான கருத்தியல் பார்வை இல்லை. அப்படியே வாய்த்தாலும் விளம்பரதாரர், முதலிட்டாளர்கள், ஜனரஞ்சக போக்கு என ஒரு அரசியல் கட்சியின் நடைமுறை சிக்கல்கள் போலவே, பல அழுத்தங்களுக்கு பலியாகி நாளடைவில் மலிந்துவிடுகின்றன.
முகநூல், ட்விட்டர் புரட்சியை போன்றதே இவ்விவதங்களும்.இவை மறுநாள் உதாசினபடுத்தப்படக்கூடிய ஒற்றைவரி செய்திகளே.முக்கியமானவை எனச் சித்தரிக்கபெற்று பின்னர் அவர்களே அடுத்த செய்திக்கு நகர்ந்து செல்வர்.மக்களும் விளம்பரங்களுக்கு ஊடே தான் சமுகத்திற்கு எதோ நல்லது செய்தார் போல் திருப்திகொள்வர்.
இவை கேளிக்கை நிகழ்ச்சிகளே. WWE போன்ற ‘நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன், நீ விழுற மாதிரி விழு’ என்ற விதியிலேயே இவை அரங்கேற்றப்படுகின்றன. அனைவருக்கும் தெரியும் இது பொய்யென.  எனினும் மனம், 10 மணி நேர உழைப்பிருக்கு பிறகு ஒரு கேளிக்கையை எதிர்பார்த்து காத்திருகிறது. அதில் அமைதியும் கொள்கிறது. கூச்சலில் அமைதி.

One thought on “தொலைக்காட்சி விவாதம் – கூச்சல் கூடாரம்”

Leave a comment